×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள்

கரூர், ஆக. 17: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகள் ஒற்றை சாளர முறையில் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் கரூரில் வரும் 19ம் தேதியும், குளித்தலையில் செப்டம்பர் 16ம் தேதியும் நடைபெறுகிறது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும், மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒற்றைச் சாளர முறையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

இதன்படி, கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் சனிக்கிழமையும் (ஆக.19), குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 16ம் தேதி அன்றும் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், பிற அரசு துறை உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் appeared first on Dinakaran.

Tags : Karur ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு